கடல் அரிப்பு

(வயிரமுத்து துசாந்தன்) நாட்டின் முன்னேற்றமும், தனிப்பட்ட மனித முன்னேற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற இன்றைய உலகில் இயற்கையின் சீற்றங்களும் மனித நடத்தையாலும் இயற்கைக்கு மாறான செயற்பாடுகளினாலும்  அவ்வப்போதே ஏற்பட்டு வருவதுடன் இயற்கை தான் இருப்பதனையும் அடிக்கடி ஞாபகமூட்டியும் செல்வதை காணமுடிகின்றது. இதனால் உலகிலே உயிரிழப்புக்கள், சொத்துச்சேதங்கள், இயற்கை வளச்சேதம் போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றமையும் நாம் அறிந்ததே.

உலகில் எந்தவொரு நாட்டிலுமாவது இயற்கை அனர்த்தங்களான வெள்ளம், பனிப்பொழிவு, வரட்சி  சூறாவளி, தீ, சுனாமி, கடலரிப்பு போன்ற பலவிதமான அனர்த்தங்கள் காலத்திற்கு காலம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இதற்கு காரணம் மனிதனுடைய  நடத்தையும் எனக்குறிப்பிட முடியும். குறிப்பாக காடுகளை அழித்தல், மண் அகழ்தல்,  போன்ற பலவிதமான அதாவது சூழலுக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் வாயிலாக இவ்வாறான இயற்கை அனர்த்தங்களும் ஏற்படுவதற்கு காரணமாய் அமைகிறது.

அவ்வப்போது பல இயற்கை அனர்த்தங்கள் தோன்றி மறைந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டே இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. புவியில் அமைந்துள்ள பெரும்பாலன பகுதி நீர் பகுதியாகவும் குறைந்த அளவே நிலப்பகுதியாகவும் அமைந்துள்ளது. இதனால் நீரின் மூலம் ஏற்படும் அனர்த்தங்கள் அதிகமாகவுள்ளது. அவ்வகையில்தான் கடலரிப்பு இன்று முக்கிய பிரச்சினையாக கடலை அண்டியுள்ள பல நாடுகளிலும் தலை தூக்கி இருப்பதை காணமுடிகின்றது. இலங்கையும் கடலால் சூழப்பட்ட ஓர் தீவு ஆகையால் இந்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

கடல் நீரானது புவியின்  நீரோடு இணைந்த உயர்நிலப்பிரதேசத்தை சிறிது சிறிதாக அரித்து தன்வசப்படுத்துவதன் மூலமாக நீர்ப்பிரதேசம் அதிகரித்து நிலப்பிரதேசம் குறைவடைவதையே கடலரிப்பு எனக் கூறுகின்றனர்.

கடலரிப்பானது பல்வேறு காரணங்களால் நிகழ்வதுண்டு கடலலை, கரையோரங்களில் மணல் அகழ்தல், ஆற்று மணல் அகழ்தல், கரையோரங்களில் முருகைக் கற்களைச் சேகரித்தல், முறையற்ற கடற்கரையோரக் கட்டடங்கள், கரையோர தாவரங்களை அகற்றுதல். போன்ற பிரச்சினைகளால் கடலரிப்பு ஏற்படுகின்றது.

காற்றலை (றiனெ றயஎந) அல்லது கடலலை என்பது நீர்நிலைகளின் அல்லது கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும். எளிமையாகக் கூறுவதென்றால் காற்றினால் தோன்றுகின்ற அலைகள் காற்றலைகள் எனப்படும். நீர்ப்பரப்புகளின் மீது அலைகள் ஒரே சீராக அமைவதில்லை. எனவே ஒவ்வொரு அலைகளும் வேறுபடுகின்றன. அலைகள் மேலும் கீழுமாக அசைகின்றதே தவிர முன்னோக்கி நகருவதில்லை. உராய்வு, வேகத்தடை, அலைமுறிவு, நிலத்தை வந்து மோதுகிற கடல் அலைகள் ஆகியவற்றின் காரணமாக கடல்நீர் நகருகிறது. இவ்வாறு நகர்கின்ற அலைகள் பல்லாயிரம் மைல்களைக் கடந்த பிறகே நிலப்பகுதியினை அடைகின்றன. நகர்கின்ற இவ்வலைகள் சிற்றலைகள் முதல் 100 அடிகள் வரை உயர்கின்ற பேரலைகள் வரை கடலில் காணப்படுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சினைகளும் நாளுக்கு நாள் ஏற்படுகின்றது.

கரையோரங்களில் மண் அகழ்தல் எனும் போது இன்றைய உலகில் கட்டிட வளர்ச்சியின் ஆதிக்கமும் அதிகரித்திருக்கின்றது, அதேவேளை பள்ளமான நிலங்களை நிரப்புவதற்காகவும். கட்டிட வேலைகளை மேற்கொள்வதற்கும் மண் ஓர் பாரிய தேவையாக உள்ளது. அதனை பெறும் வகையில் கடற்கரையை அட்டிய பகுதியில் மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.

உலகில் கடலரிப்பின் தாக்கத்திற்கு பல்வேறு நாடுகள் உள்ளாகி இருப்பதை அறிய முடிகின்றது. இந்தியாவில் பல்வேறு கிராமங்கள் கடலுக்குள் செல்லும் அபாயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 7500 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியில் சுமார் 1500 கிலோ மீட்டருக்கு அதிகமாக கடலரிப்பு உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கையில் உள்ள கடலோர மாவட்டங்கள் பல இன்று இப்பிரச்சினைக்கு ஆளாகி உள்ளமையை காணமுடிகின்றது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் முல்லைத்தீவு. மன்னார், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, புத்தளம், கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, கழுத்துறை போன்ற மாவட்டங்களில் உள்ள பிரதேசங்கள் இதனுள் அடங்குகின்றன.

புத்தளம் மாறவில முகுதுகொட்டு பகுதியில் 2008ம் ஆண்டில் இடம்பெற்ற கடலரிப்பினால் 18வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் 32குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்தமையும். ஞாபகமூட்டத்தக்கது. காலி, உணவடுன கடற்கரை பகுதி 2013ம் ஆண்டு பெரும் கடலரிப்பிற்கு உட்பட்டதாகவும் அறியமுடிவதுடன் இதனால்  உணவடுன சுற்றுலா பிரதேசத்தில் 30 ஹோட்டல்கள் மற்றும் வாடி வீடுகள் அரிப்பிற்கு உட்பட்டதாகவும்  கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கடற்பரப்பிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக அன்றைய நிலையில் கூறப்பட்டது. அதே போன்றே மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள கடலோர மக்களின் முக்கியப் பிரச்சனையாக கடலரிப்பு  பேசப்பட்டது. இதன் காரணமாக கடலோரத்தில் இருக்கும் குடிசைகளில் வாழும் மக்கள் பாதிப்படைவதுடன் அவர்களுடைய இருப்பிடங்கள் முற்றாக அழிந்துவிடுகின்றன. கடலோரத்தில் இருக்கும் கட்டுமானங்களான சாலைகள், மின் கம்பங்கள், கட்டடங்கள் முதலியவை அழிந்து கடலுக்குள் மூழ்கி விடுகின்றன. அத்துடன் கடலோரத்தில் உள்ள தென்னை, பனை தோப்புக்கள் அழிவடைகின்றன. மீனவர்களின் தொழில் பகுதிகள் கடலால் ஆக்கிரமிக்கப்படுவதால் அவர்கள் தொழிலுக்காக வேறு இடங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இவ்வாறு அதிகமான கடலரிப்பின் காரணமாக உப்பு நீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக ஆகிறது. இதனால் கடலோர மக்களின் குடிநீர் ஆதாரம் முற்று முழுதாக பாதிப்படைகிறது.  இதனால் கடலரிப்பு இப்பகுதியில் ஏற்படுவதன் முக்கியக் காரணம், துறைமுக விரிவாக்கம், கடல் நீர் மட்ட உயர்வு, மணற்கொள்ளை, தூண்டில் வளைவு அமைக்கப்படுதல், போன்றவை. இத்துடன் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள் பெருமளவில் அழிந்துபோவதாலும் கடலரிப்பு ஏற்படுவதாகச் அப்பிரதேசத்து மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தனர்.

அதே போன்று கிழக்கு மாகாணமும் கடலோர பிரதேசம் என்றவகையில் கடலரிப்பினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம், ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பல பகுதிகள்  பாதிக்கப்படுவதுடன், ஒலுவில்  பிரதேசம் கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் அதற்கு எதிராக மக்கள் பல்வேறு ஆர்பாட்டங்களையும், அறிக்கைகளையும் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர். குறிப்பாக ஒலுவில் கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் ஒரு சில நாட்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் சரிந்து வீழ்ந்ததாகவும், சுமார் 200 அடி அகலமான நிலப்பகுதி கடலரிப்பின் காரணமாக ஏற்கனவே கடலுக்குள் மூழ்கியுள்ளது. எனவும் அம்மக்கள் குறிப்பிட்டிருந்தனர். பிரதேசத்தில் துறைமுகமொன்று அமைக்கப்பட்ட பின்னரே பெரிய அளவிலான இந்தக் கடலரிப்பு அச்சுறுத்தலை தமது பிரதேசம் எதிர்கொள்வதாகவும் அப்பிரதேசத்து மக்கள் குறிப்பிட்டிருந்தனர், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் சென்று இதனை பார்வையிட்டிருந்தமையும் அறியத்தக்கது.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாவலடி பிரதேசமும் அதிகமாக கடலரிப்பினால் பாதிக்கப்படும் இடமாக அமைந்துள்ளது. 2011ம் ஆண்டு இப்பகுதியில் பாரிய அளவிலான கடலரிப்பு ஏற்படும் அபாயம் காணப்பட்டதாகவும் அதன் மூலமாக கல்லடிப்பாலத்திற்கு ஆபத்து  ஏற்படலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் போக்குவரத்து பாதிக்க கூடும் என்றும் நிலையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேசங்களும் கடலரிப்பினால் பாதிக்கப்படும் பிரதேசமாக காணப்படுகின்றது. இவ்வாறு இலங்கையில் பல்வேறு பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையுடன் தொடர்ச்சியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றமை பாரிய பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. காலப்போக்கில் கடல்மட்டத்தின் உயரம் அதிகரிக்க கூடும் என்ற ஆய்வுகளும் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு கடல் மட்டம் அதிகரித்துச் செல்லுமாக இருந்தால் கடலரிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இந் நிலையில் இலங்கையில் கடலரிப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.  அவ்வகையிலே 1981 ஆம் ஆண்டு கரையோரக் காப்புச் சட்டம் சரியான முறையில் அமுல்படுத்தப்படுதல், கரையோர வலைய முகாமைத்துவ யோசனைகளை சரியான முறையில் அமுல்படுத்துதல்,; , இயற்கையோர தாவரங்களை நடுதல், தொலைத்தொடர்பு சாதனங்கள  கல்வி நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு , அறிவுரை புகட்டல், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கல் அல்லது வழங்குதல், உள்ளாச விடுதிகளை முறையாக அமைவுறச் செய்தல். போன்ற பலவிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் பயனாக கடல் அரிப்பின் தாக்கத்தை குறைத்து கொள்ள முடியும்.




கருத்துகள் இல்லை