தாய்மொழியை இழந்தவன் தன்விழி இழந்தவன்
(வயிரமுத்து துசாந்தன் ) 1952ம் ஆண்டு கிழக்கு பாகித்தான் தலைநகர் தக்காவில் வங்களா மொழியை
அரசகரும மொழியாக ஆக்ககோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த
மாணவர்களின் நினைவாகவும் அனைத்துலக அமைப்புக்களது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய
நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு (யுனஸ்கோ) அமைப்பின் 1999 பெப்ரவரி 21
பொது மாநாட்டின் 30வது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழி நாளாக
அறிவித்தது. அன்றிலிருந்து பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினமாக உலகம்
முழுவதும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
தாய்மொழியை
இழந்தவன் தன்விழி இழந்தவன் என்ற கூற்றுக்கிணங்க தாய்மொழி ஒரு இனத்தின்
அடையாளமாக இருந்துவிடுகின்றது. அதனை அழித்து விட்டால் அச்சமூகமே
அழிந்துவிடும். உலகிலே 7000க்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அவற்றில்
50வீதமானவை அழிந்துவிடும் நிலையில் இருந்து கொண்டு இருப்பதாகவும் ஐக்கிய
நாடுகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பல மொழிகள் எழுத்து
வழக்கில்லாத மொழிகளாகவே இன்றும் இருந்து வருகின்றது.
தங்களது
தாய்மொழிகளிலே கற்றவர்களே இன்று வசதிபடைத்தவர்களாகவும், வசதிபடைத்த
நாடுகளாகவும் இருந்து கொண்டிகின்றது. அதேபோன்று கண்டுபிடிப்பாளர்கள் பலரும்
தாய்மொழியை பயன்படுத்தியவர்களாகவே இருக்கின்றனர். அவ்வகையில்
தாய்மொழிக்குள்ள சக்தியும் பலமும் வேறுஎந்த மொழிகளைப் பயன்படுத்தினாலும்
கிடைப்பதில்லை. இலங்கையிலே பல மொழிகள் இருந்தாலும் சிங்களம், தமிழ் மொழிகளே
அதிகம் பேசப்படுகின்றன மற்றைய மொழிகள் அனைத்தும் ஏனைய மொழிகள் என்பதற்குள்
அடங்குகின்றவையாக இருந்து கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு
மாவட்டத்திலே பிரதானமாக தமிழ்மொழி பேசுகின்றவர்கள் அதிகமாக இருந்தாலும்
ஏனைய மொழிபேசுகின்ற சமூகங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான
சமூகங்களின் மொழிகள் இன்று அவர்களை விட்டு சென்று கொண்டிருக்கின்ற நிலையும்
இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக வேடர் சமூகத்தின் மொழி, தெலுங்கு
மொழி, பறங்கிய சமூகத்தினரது மொழிகள் இன்று அவர்களையும் அவர்களை தொடர்ந்து
வருகின்ற பிள்ளைகளிடமிருந்தும் விலகிச் சென்று கொண்டிருப்பதாக கூறி
அச்சமூகம் வேதனையுறுகின்றனர்.
அளிக்கம்பையிலே
வாழ்ந்து கொண்டிருக்கின்ற தெலுங்கு மொழி பேசுகின்றவர்களின் வீதம் மிகவும்
குறைவடைந்து செல்வதாகவும் அவர்கள் பேச்சளவில் தங்கள் மொழியை ஒரு சிலர்
பேசினாலும் எழுத்துவடிவத்தில் அவர்கள் பயன்படுத்துவதில்லை இதனால் இன்றைய
தெலுங்கு சமூகத்தினருக்கு அவர்களது மொழியின் எழுத்து வடிவத்தை
தெரியாதவர்களாவே இன்று இருந்து கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
உலகிலே
பல்வேறு மொழிகள் காணப்படுகின்றபோதிலும் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன்,
ஹீப்ரு, சீனம், தமிழ் மொழிகளே இன்று செம்மொழிகளுக்கான அந்தஸ்தை
பெற்றிருக்கின்றன. அதே நேரம் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் போன்ற
மொழிகள் வழக்கத்தில் இல்லை ஆனாலும் ஹீப்ரு மொழியை வழக்கத்திற்கு
கொண்டுவரவேண்டும் என்ற செயற்பாட்டில் அச்சமூகம் முயற்சி செய்து
கொண்டிருக்கின்றது. தமிழ்மொழியும், சீனமும் இன்றும் பயன்பாட்டில் இருந்து
கொண்டிருக்கின்றது.
பாரதி
பல மொழிகளை கற்றுத்தேர்வராக இருந்தாலும் அவர் குறிப்பிடும் போது யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்றார் இதனடிப்படையில்
தமிழ்மொழயின் சிறப்பு இன்னும் பலமடங்கு மேலோங்கி இருக்கின்றமை கண்டு
பெருமிதம் கொள்ள வேண்டியவர்களாக தமிழ்மொழி பேசுபவர்கள் இருக்கின்றனர்.
வேறந்த
மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு இருக்கின்ற போதிலும் அதனை தமிழ்
மொழிபேசுகின்றவர்கள் புரிந்து கொள்வதில்லை ஒரு இனத்தினை அழிப்பதற்கு
ஆயுதம் தேவையில்லை, பணமும் தேவையில்லை அவர்களது மொழியை அழித்துவிட்டால்
அந்த இனமே முற்றாக அழிந்து விடும். அந்நிலையில்தான் பல மொழிகள் இன்று
அழிந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மொழிக்கும் அந்நிலை எதிர்காலத்தில்
ஏற்படாது என்று கூறிவிடமுடியாது. ஏனெனில் தற்காலத்தில் நாகரீகமான
வாழ்க்கையில் தாய்மொழியை பயன்படுத்துவதை விட பிறமொழியை பயன்படுத்துவதே
நாகரீகம் என பல தமிழ்பேசுகின்றவர்கள் கூறுகின்றனர். இதனால் தமிழிலே இன்றும்
பல மொழிகள் கலந்து கொண்;டிருக்கின்றன. குறிப்பாக ஆங்கில மொழியின் ஆதிக்கம்
அதிகமாக தமிழிலே இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ்மொழியை தூய
தமிழாக பேசத்தெரியாதவர்களாக பலர் திண்டாடுகின்ற நிலையும் இருந்து
கொண்டிருக்கின்றது. அதேவேளை எம்மிடம் இருக்கின்ற பேச்சு வழக்கு சொற்களும்
நாகரீகம் என்ற போர்வையிலும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அறிவு
மேம்பாட்டிற்காகவும் இலகு தொடர்பாடலுக்காகவும் பிறமொழிகளை கற்றாலும்
அந்நோக்கத்திற்காகவே அதனை பயன்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். அதனை
விடுத்து நாகரீகமான போக்கிற்காக பிறமொழியை பயன்படுத்தும் போது
தமிழ்மொழியும் எதிர்காலத்தில் இல்லாதொழிக்கப்பட்டுவிடும் என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை. எனவே தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து
தமிழ்மொழியில் உள்ள ஓலைச்சுவடுகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள்,
பேச்சுவழக்குகள் என்பவற்றை ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததிகளுக்கு தமிழின்
இனிமையை இன்னும் அதிகம் சுவைக்க கொடுக்க வேண்டியது அனைவரது தலையாய கடமையும்
ஆகும்.
Post a Comment