சர்வதேச மகளிர் தினமும் இலங்கை தீவில் மகளிர் தின அனுஸ்டிப்பும்

(படுவான் பாலகன்) சர்வதேச மகளிர் தினம் இன்று(08.03.2016) உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக மட்டுமே பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட வழங்கப்பட்டாமல் மறுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் 1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டது.. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகவும் வெறுப்பு அடைத்தனர். ஆண்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்காததினால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.  

1920ம் ஆண்டு சோவியத் ரஸ்;யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. 

இலங்கையிலும் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்நிலையில் 
“சக்தியுள்ள பெண்-பிரகாசமான நாளை” 

என்ற தொனிப்பொருளில் இலங்கையில் மகளிர் தினம் இவ்வருடம்(2016) கொண்டாடப்படுகின்றது.  பெண்களுக்கான உரிமைகளும், சமத்துவமும் இலங்கையில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதற்கு எடுத்துக்காட்டாக நாட்டின் ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க இருந்து ஆட்செய்ததுடன், பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் இருந்து ஆட்சி புரிந்துள்ளார். மேலும் இன்று நாட்டில் உள்ள அரச, அரசசார்பற்ற திணைக்களங்களில் உயர்பதவிகளிலும் பெண்கள் வகித்து தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். பெண்களுக்கு சமத்துவம், உரிமை வழங்கப்பட்டாலும் இலங்கை தீவில் வன்முறைகளும், கொலைகளும் அண்மைக்காலங்களாக தலையெடுத்திருப்பதும் மிகவும் வேதனையே. 

சிறுவர்கள், மாணவர்கள், கற்பிணி தாய்மார், என பலரும் வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் உள்ளாகியுள்ளனர். இவ்வாறான வன்முறைகளும், கொலைகளும் மாணவர்கள், சிறுவர்கள், யுவதிகள் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு நீதிகோரிய ஆர்பாட்டங்களும், வன்முறைகள், கொலைகள் இனியும் இடம்பெறக்கூடாது போன்ற பேரணிகளும் மாணவர்களினாலும், பெண்கள் அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான ஆர்பாட்டங்கள், பேரணிகள் இடம்பெற்றாலும் வன்முறைகளும், கொலைகளும் முடிவடைந்தபாடில்லை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கில் இருக்கின்ற பல்வேறு குடும்பங்களின் தலைவர்களாக பெண்களே இருக்கின்றனர். இதற்கு கடந்த காலயுத்தம் காரணமாக இருந்தாலும் இவர்களில் பலர் இன்று உண்பதற்கு கூட மிகவும் கஸ்டத்தில் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பலரும் இருந்து கொண்டிருக்கின்றனர் இவர்களுக்கும் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியமாகின்றது.



நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்ற சூழலில் மகிழ்ச்சியாக மகளிர் தினத்தை கொண்டாடவேண்டிய இன்றைய தினத்தில் நாட்டில் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து மகளிர் தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்கின்ற நிலையும் உருவாகி இருக்கின்றமையும் துயரே. கண்கள் ஒளிபெறும் தினத்தில் கண்கள் ஒளியிழக்கும் நிலை இன்றிலிருந்து தொடராமல் வன்முறைகள், கொலைகள் களையப்பட்டு பெண்களுக்கான சமத்துவம், உரிமை, நீதி, நிம்மதி கொண்ட நாடாக இலங்கை மாற்றமடையவேண்டும். 

கருத்துகள் இல்லை