தலைகுனிந்த நாள்!

தலைகுனிந்த நாள்!

பிள்ளைப்பருவம் - அது
எள்ளி நகையாடிய காலம்
புத்தகப் பையுடன்
துள்ளிக்குதித்த நிமிடம்!

எழுந்து குளித்து
ஏழரைக்குள் பாடசாலை வாசல்
சக நண்பர்களுடன்சகவாசம்
வேலைசெய்யும் பிள்ளைகளுடன் வெற்றுப்பேச்சு!

முதலாம் பாட மணியோசை - என்
குரங்குச் சேட்டை ஆரம்பம்
வாத்தியாரின் கண்டிப்பு – நான்
வாய்திறக்கா அமைதி

பாடத்தில் கவனமில்லை
படிப்பிப்பவரின் முகம் தெரிகிறது
மனம் எங்கெங்கோ அலைகிறது
என்னென்னவோ தோன்றுகிறது

சட்டொன்றொரு வினா
சடுதியாய் எழுந்து நிற்கின்றேன்
கேட்டதும் விளங்கவில்லை
கேலியாய் சிரிப்பொலி

காலங்கள் கடந்தன
சாதாரணதரப்பரீட்சையும் ஆரம்பம்
பள்ளியைவிட்டு அகல்கின்ற நாள்
பாலர் வகுப்பில் பழகியவரையும் பிரியும் நேரம்

கையில் ஒருவனை பிடித்தவனாய்
பிரதேச செயலக அலுவலகத்தில்
கரத்தில் விண்ணப்பத்துடன்
பூர்த்திசெய்து தாருங்கோ!


என்னடா என்கிறான்?
உரிமையோடு ஒருத்தன்!
கையைப்பற்றுகிறான் சுகம் விசாரிக்கின்றான்
வேறுயாருமில்லை பள்ளி நண்பந்தான்!

தலைநிமிர மனம் இடங்கொடுக்கவில்லை
பேசுவதற்கும் வார்த்தை வரவில்லை
வாறேன் என்றேன் வந்துவிட்டேன்!
என்னவென்று நினைத்தானோ?

பாடசாலைப்பருவத்தில் தலைநிமிர்வு
நண்பன் முன்னிலையில் தலைகுனிவு
வாத்தியாரின் உபதேசம் உறைக்கும் நேரம்
நீர்சொட்டலுடன் வெளியேறிய தருணம்.

கருத்துகள் இல்லை